" பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைத்ததை ரத்து செய்ய வேண்டும் " - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி .

" பள்ளிகள் திறக்கும் தேதியை  தள்ளி வைத்ததை ரத்து செய்ய வேண்டும் " - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி .
Published on
Updated on
2 min read

" பள்ளிகள் திறக்கும் தேதியை  தள்ளி வைத்ததை ரத்து செய்ய வேண்டும் " என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திரு.க.அறிவொளி ஆகியோருக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.  

அவர்  எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு: 

அன்புடையீர் வணக்கம்.!

கோடை விடுமுறைக்கு பின், ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வகுப்புகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜூன் 7-ம் தேதிக்கு பிறகுதான் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று ஒரு வாய்மொழி உத்தரவும்; இப்பொழுது ஜூன் 12, 14 ஆம் தேதிக்கு பிறகு தான் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையும்  அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு ஆண்டின் 365 தினங்களில் 210-220 நாட்கள் மட்டுமே பள்ளி வேலை நாட்களாகவும்; 140 தினங்களுக்கு மேல் விடுமுறை தினங்களாகவும் உள்ளன. மாறிவரும் பல்வேறு சூழல்களில் 220 நாட்களுக்கு உள்ளாக பாடத்திட்டங்களை முடிப்பதில் ஆசிரியர் பெருமக்களுக்கும், அவற்றைப் படிப்பதில் மாணவர்களுக்கும் அது மிகவும் சிரமம்.

கோடை விடுமுறை கழித்து மாணவர்கள் புதிய பாடங்களை படிப்பதற்கு மிகுந்த ஆர்வத்தோடு இருப்பார்கள். ஆனால், கல்வியாண்டின் துவக்கத்திலேயே கல்வி நாட்களை மாணவர்கள் இழக்க வேண்டி இருப்பின், ஆண்டின் இறுதியில் மாணவர்களுக்கும், கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கும் அது பெரும் சுமையாக இருக்கும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் பல நேரங்களில் ஜனவரி மாதங்களிலும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு; புயல், மழை போன்றவை எதிர்பாராத அளவுக்கு வீரிய தன்மையோடு இருக்கின்ற பொழுது தவிர்க்க முடியாத நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க நேரிடும்.

இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தின் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை  காரணம் கூறி, தமிழகத்தில் பள்ளிகளுக்கு 12 மற்றும் 14-ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல! 

ஏற்கனவே, கரோனா கால கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடத்தில் கல்விகற்றலில் (Learning Gap) ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வதற்கே இன்று வரையிலும் ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே 15 தினங்கள் விடுமுறை என்பது கல்விகற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வருங்காலங்களில் இது ஒரு தவறான முன்னுதாரணமாகவும் அமையும்.

பொதுவாக எல்லா பள்ளிகளுமே காலை 8.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக துவங்கி, மாலை 3.30 மணிக்கு பிறகு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். எனவே, குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும்போதும், பள்ளியிலிருந்து திரும்பும் போதும் வெயில் தாக்கம் குறைவாகவே இருக்கும். மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் ஒரே அளவில் இருப்பதில்லை.
சர்வதேச பள்ளிகள் நடைபெறும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, குன்னூர் போன்ற பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் எதுவும் இருக்காது. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் எப்பொழுதுமே குறைவாக இருக்கும். சில வடக்கு, தெற்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கலாம். அந்தந்த மாவட்ட பகுதிகளின் பூகோள சூழலுக்கு ஏற்ப பள்ளி நிர்வாகங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு மாறாக, ஒட்டுமொத்தமாக அனைத்து பள்ளிகளையும் மூடிட மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது சரியான முறையல்ல.

எனவே, தமிழ்நாடு கல்வித்துறையில் 12, 14 ஆம் தேதி வரை பள்ளிகளை மூடிடப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யவும், விரைவாக பள்ளிகளைத் திறப்பதற்கு உண்டான நடவடிக்கையை எடுக்கவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க தமிழ்நாடு முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்." 

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com