கால்நடை மருத்துவ படிப்பிற்கான 7.5% அரசு பள்ளி பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த பி.வி.எஸ்.சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் உள்ளிட்ட 4 இளநிலை பட்டப் படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம் கலந்தாய்வு தொடங்கியது.
நேற்று பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு நடைபெற்றது. இன்று 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும், பி.டெக் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு (நாளை) 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் ஒரு மணிநேரம் முன்னதாகவே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நடக்க இருக்கிறது. அதற்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இதுதொடர்பான மேலும் விவரங்களை www.adm.tanuvas.ac.in. www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:சிங்கப்பூர் மாடலில் கலைஞர் பூங்கா!