நாகையிலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே தூதரக மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றை தொடங்கியிருக்கிறோம் என்றும், இரு நாடுகளும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தில் ஒரு ஆழ்ந்த வரலாற்றை பகிர்ந்து வருவதாகவும் கூறினார்.
முன்னதாக பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னிட்டு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "செரியாபாணி" என பெயரிட்டப்பட்ட கப்பல் நாகை, இலங்கை இடையே பயணிக்க உள்ளது.
இந்த கப்பல் சுமார் 60 கடல் மைல் நாட்டிகல் தூரத்திலுள்ள இலங்கை காங்கேசன் துறைமுகத்தை 3 மணி நேரத்தில் சென்றடையும். நாகையில் இருந்து இலங்கை செல்ல ஒரு நபருக்கு 7ஆயிரத்து 670 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவக்க நாள் சலுகையாக இன்று ஒருநாள் மட்டும் நபர் ஒருவருக்கு 2 ஆயிரத்து 803 மட்டும் பயண கட்டணமாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
கப்பல் சேவை துவக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் மற்றும் அமைச்சர்கள் எ.வ வேலு, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.