சொந்த நிலத்தில் நூலகமும், மைதானமும்... பாராட்டுகளை அள்ளும் சமூக ஆர்வலர்!!

சொந்த நிலத்தில் நூலகமும், மைதானமும்... பாராட்டுகளை அள்ளும் சமூக ஆர்வலர்!!
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சமூக ஆர்வலர் ஒருவர் கிராமப்புற மாணவர்களுக்கு நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம், தென்காசி - அம்பாசமுத்திரம் சாலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருப்பவர் செண்பகராமன். 

ஆன்மீகவாதியான இவர் தோரணமலை கோவிலுக்கு வருகின்ற ஏழை எளிய கிராமப்புற மாணவி, மாணவிகள் படிப்பதற்காகவும், உடல் திறனை மேம்படுத்தவும் கடந்த சில மாதங்ளுக்கு முன்பு ஆலயத்தில்  நூலகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தினார். 

இதே போன்று  செண்பகராமன் தனது சொந்த ஊரான முத்துமாலைபுரம் கிராமத்தில் அவரது தந்தை வாழ்ந்த வீட்டில் மாணவ மாணவிகளின் கல்வி அறிவு மற்றும் அறிவித்திறன் மேம்படும் வகையில் மாலை நேர படிப்பகம் அமைத்து கொடுத்துள்ளார்.

மேலும் மாணவ, மாணவிகள் இடையே விளையாட்டுத் திறன் மேம்படும் வகையில் சிலம்பம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கிராமப்புற குழந்தைகள் கற்றுத் தேறுகின்ற வகையில் தனது சொந்த நிலத்தில் விளையாட்டு மைதானமும் அமைத்து கொடுத்துள்ளார். 

விளையாட்டு மைதானம் மற்றும் மாலை நேர படிப்பகத்தை  மருத்துவர் தர்மராஜ் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார். கிராமப்புற மாணவ மாணவிகள் படிப்பிலும் உடல் திறனையும் மேம்படுத்த சொந்த நிலத்தில் நூலகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை அமைத்து கொடுத்த சமூக ஆர்வலர் செண்பகராமனுக்கு சுற்று வட்டார பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com