ராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பெண் ஒருவர் சாமியாடி குறி சொன்ன வீடியோ மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக மக்கள் எழுச்சி கழகம் கட்சியைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் திராவிட அரசியல் குறித்தும், தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென நிலைமை மாறியது.
அப்போது கருப்பசாமி வேடம் அணிந்தவாறு, மேடையில் ஏறினார் ஒருவர். மேடையில் ஏறி பக்தி மனம் கமழ கமழ நடந்த இந்த ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்கள் சிலரே சாமியாடியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மேடையில் சாமியாடியவாறே நின்ற பெண் ஒருவர்,, தொண்டர்கள் சிலரை வரவழைத்து குறி சொல்லியுள்ளார். டி.ராஜேந்தர் பாணியில் அடுக்கு மொழிகளை அள்ளி வீசிய அப்பெண் சாமியார், நரேந்திர மோடி முதல் அண்ணாமலை, எடப்பாடி வரை பா.ஜ. க மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்களை கிழித்தெடுத்துள்ளார்.
அப்பொழுது,
"மோடியின் ஆட்சியடா, முகத்திரையும் கிழியுமடா,
எடப்பாடியின் கட்சியடா, ஏழு எட்டா போச்சுதடா,
பாத்து நடந்துக்கடா, பக்குவமா இருந்துக்கடா,
அண்ணாமலை ஆட்டமடா, அந்தரத்தில் தொங்குதடா,
திராவிட மாடலடா, திருப்பி அடிப்போமடா, ஷ்ஷ்ஷ்ஷு" என சாமியாடியவாறே, டி.ஆர் போல் பேசி, எதிர்கட்சிகளை துவம்சம் செய்துள்ளார்.
ஒரு பக்கம் இதெல்லாம் வேடிக்கையாக இருந்தாலும், மற்றொரு பக்கம் எதற்காக இது போன்ற வேடிக்கையான செயல்கள் எல்லாம், கட்சி கூட்டத்தின் மேடையில்நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன, என சமூக ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.