வரி கட்டுங்க விஜய்..!கடனை அடைங்க அஜித்..! ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!

இணையத்தில் மீண்டும் மோதும் விஜய், அஜித் ரசிகர்கள்..1
வரி கட்டுங்க விஜய்..!கடனை அடைங்க அஜித்..! ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவுல கொடிகட்டி பறக்கும் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். ஆண்டுக்கு ஒரு படமாக நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருபவர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் கொண்டாட்டம் முடிவடையாத நிலையில், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு வரி விலக்கு கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரி வசூலிக்க தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனவும் குறிப்பிட்டார். வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் காட்டமாக தெரிவித்தார்.

மேலும் வரி செலுத்தாமல் இருப்பதும் தேசத் துரோகம் தான் என்ற நீதிபதி, சமூக நீதிக்காக பாடுபடுவதாக பிரதிபலிக்கும் ஹீரோக்கள் வரிவிலக்கு கோருவதை ஏற்க முடியாது என்றார். நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருங்கள் ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது என்றும் கண்டித்தார். இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நீதிபதி, விஜய்க்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து, அதனை முதலமைச்சர் கொரோனா நிதிக்கு வழங்க வேண்டும் என ஆணையிட்டார். 

இதனையடுத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். விஜய்யை சீண்டிவது கண்டிப்பாக அஜித் ரசிகர்களாகத் தான் இருப்பார்கள் என்ற தோற்றம் அனைவர் மனதிலும் உண்டு. திரைக்கு பின்னால் விஜய், அஜித் ரசிகர்கள் அடித்துக் கொள்வது சகஜம் தானே? தற்போது விஜய் மாட்டிக் கொண்டிருக்கூடிய வேளையில், விஜய் ரசிகர்கள் அஜித்தை சும்மா விடுவார்களா?

நடிகர் அஜித்குமார், தன்னிடம் கடனாக பெற்ற ரூ.6லட்சம் கடனை இதுநாள் வரை திருப்பி தரவில்லை என தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் கடந்த பிப்ரவரி மாதம் குற்றம்சாட்டிருந்தார். 1996-ம் ஆண்டு தன்னுடைய பெற்றோரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டி தன்னிடம் ரூ.6லட்சம் கடன் பெற்றதாகவும், இதுநாள் வரை தரவில்லை என பகிரங்கமாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். வழக்கம் போல இந்த குற்றச்சாட்டிற்கு அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும், மறுப்பும் வராமல் உள்ளது. 

இப்படியாக விஜய்யின் தற்போதைய வரி பிரச்னையையும், அஜித்தின் எப்போதைய கடன் பிரச்னையையும் சேர்த்து ட்விட்டரில் ”#wesupportthalapathyvijay #வரிகட்டுங்க_விஜய், #கடனை அடைங்க_அஜித்” என்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்டிங்கில் உள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com