"ஜெயிலர்" படத்தில் பெங்களூரு ராயல் செலஞ்சர் அணியின் ஜெர்சியை பயன்படுத்திய காட்சியை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் காட்சிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்திருந்த காட்சிகள் இடம் பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் ஜெர்சி அணிந்திருந்த ஒருவர் பெண்களுக்கு எதிராகவும் அவதூறு பரப்ப கூடிய வகையில் சில கருத்துக்களையும் திரைப்படத்தில் பேசியதாக கூறி, இது தங்கள் அணியின் பிராண்ட் இமேஜை கெடுக்கும் எனக்கூறி ஐபிஎல் அணியான ஆர்.சி.பி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிரதிபா எம்.சிங் தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செப்டம்பர் 1ம் தேதி முதல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்த காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் ஓ டி டி தளங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.