தந்தையை இழந்த இளம் பாடகி, ஆறுதல் சொல்லி தேற்றிய  இசையமைப்பாளர் தமன் !!

தந்தையை இழந்த இளம் பாடகி, ஆறுதல் சொல்லி தேற்றிய  இசையமைப்பாளர் தமன் !!
Published on
Updated on
2 min read

இசையுலகில் மிக முக்கிய நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. பல ஆச்சர்ய தருணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கடந்த வார நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்வான ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.  

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருவதுடன்,  தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர்,  ஜூனியர்  என பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது.  தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், இளம் சிறுமி சனு மித்ரா தனது அற்புத குரலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியில் அவரின் கதையை பகிர்ந்து கொண்டபோது, மொத்த அரங்கமும் சோகத்தில் ஆழ்ந்தது. சனு மித்ராவின் இசை ஆசைக்கு, உறுதுணையாக இருந்த பாசமிகு தந்தை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு அவரைக் கூட்டி வந்து செல்கையில், விபத்தில் பறிபோன கதையைப் பகிர்ந்து கொண்டார். சூப்பர் சிங்கர் இசைப்போட்டியில் ஜெயிக்க வேண்டும் எனும் அவரது தந்தையின் கனவை நனவாக்க, தன் தாயின் துணையுடன் போராடும் சனு மித்ராவின் பயணம் அனைவரையும் உருக வைத்தது. 

இதைத் தொடர்ந்து தொகுப்பாளிணி பிரியங்கா,  என் தந்தையையும் என்னுடைய 11 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா  தான் தந்தையை போல் பார்த்து கொண்டார். தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து, ஆசிர்வதிப்பார் என்று ஆறுதல் சொன்னார். 

இந்நிகழ்ச்சியில் நீதிபதியாக இருந்து வரும் இசையமைப்பாளர் தமன், தன் தந்தை குறித்துப் பகிர்ந்து கொண்டார்,  என்னுடன் ரயிலில் பயணிக்கையில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு என்  தந்தை என்னுடைய 9 வயதில் தவறிவிட்டார் என தன் சோகத்தை பகிர்ந்தவர், சனுவிடம்  “நாங்கள் அனைவரும் உன் கூட இருப்போம், எதற்கும் கவலைப்படக்கூடாது” என்று ஆறுதல் கூறினார். மேலும் ஆண்டனி தாசன் அவர்கள் அந்த சிறுமியின் துக்கத்தைப் போக்கும் விதமாக, அவர் தந்தை குறித்து ஒரு அருமையான பாடலை பாடி அனைவரையும் உருகவைத்தார். 

இந்த வாரம் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்ததாக அமைந்துள்ளது. இசையில்  திறமை மிக்கவர்களுக்கு ஒரு அற்புதமான  மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com