ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான ஒகேனக்கலுக்கு தினமும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது ஞாயிறு விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், முதலை பண்ணை, ஐந்தருவி, உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் காவிரி ஆற்றின் அழகை காண்பதற்காகவும், நீர்வீழ்ச்சிகளை ரசிக்கவும், பரிசல் செல்ல ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள், பரிசல் துறை பகுதியில் குவிந்துள்ளனர். விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகளால், வியாபாரம் அதிகரித்துள்ளது. மேலும் மீன் விற்பனையும் அதிகரித்துள்ள நிலையில், மீன் சமையல் செய்யும் தொழிலாளர்களும், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வந்த வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வசதி இல்லாததால், பிரதான சாலைகளில் நீண்ட தூரம் காத்துக் கொண்டு இருக்கின்றன. மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் , பாதுகாப்பு பணியிலும் ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்