கேளிக்கை வரி விலக்கு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு...

தமிழில் பெயர் வைப்பதால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உரிமை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேளிக்கை வரி விலக்கு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு...
Published on
Updated on
1 min read

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், ஐ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது.  இதனை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான புதுச்சேரி அரசு தரப்பு வழக்கறிஞர், ஐ என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படவில்லை என  தெரிவிக்கப்பட்டது. தமிழில் ஐ என்பது வியப்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கு அர்த்தம் உள்ளதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிப்பதற்காக சலுகையாக அரசு  கேளிக்கை வரி விலக்களிப்பதாகவும், சலுகையை உரிமையாக கோர முடியாது என தெரிவித்துள்ளார். நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்கும் எனவும் கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். 

மேலும், பெயரில் தமிழ் வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்திற்காகவே கேளிக்கை வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com