ஏ.ஆர் ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி!

ஏ.ஆர் ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி!
Published on
Updated on
2 min read

ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் படுமோசம் என்றும், டிக்கெட் வாங்கிய பலர் உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை என்று மறக்காது நெஞ்சம் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நாளன்று பலத்த மழை பெய்த நிலையில், ரசிகர்களின் நலன் கருதி  இசைநிகழ்ச்சி வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஏஆர்ரஹ்மான் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதனையடுத்து, இசைநிகழ்ச்சி ஈசிஆர் ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் செப்டம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது.

இன்றைய தினம் இசைக்கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என 2 ஆயிரம்  முதல்  15 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அங்கு சென்ற ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. எந்த ஒரு சரியான ஏற்பாடுகளும் செய்யவில்லை. பார்க்கிங் வசதியில்லை. சேர் வசதியில்லாமல் பல ரசிகர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி பல மணி நேரம் க்யூவில் நிற்க வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ள ரசிகர்கள், “3 மணிக்கு கேட் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் 4 மணிக்கு மேல் ஆகியும் கேட் திறக்கப்படவில்லை” என்றும், கடுமையான ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் குளறுபடிகளால் இசைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்வதற்கே பல மணி நேரம் பிடித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த இடங்களை பலர் ஆக்கிரமித்துக்கொண்டதாக கூறியுள்ளனர். உச்சபட்சமாக டிக்கெட் இருந்த பலரை இடமில்லை என்று கூறி உள்ளேயே அனுமதிக்கவில்லை என்று திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் ஏமாற்றத்துடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பணத்தை இழந்து திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்றவர்களாலேயும் இசை நிகழ்ச்சியை பார்க்கமுடியாத அளவிற்கு இருந்தது. தண்ணீர் கிடைக்கவில்லை. கழிவறை வசதி இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர். 

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி சரியாக இசைக்கச்சேரியை கேட்க முடியவில்லை என்று கதறிய ரசிகர்கள் ஒரு கட்டத்தில்  சத்தமே இல்லையென்று கூச்சலிட ஆரம்பித்து விட்டனர். சவுண்ட் சிஸ்டம் சரியில்லை என்று பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினர்.

பல ரசிகர்களால் கச்சேரி நடைபெறும் இடத்திற்குள் போக முடியவில்லை என்று கூறி உயிர் பிழைத்தால் போதும் என்று சொல்லி வீடு திரும்ப ஆரம்பித்தனர். என் குழந்தைகளின் மூச்சே நின்று போயிருக்கும் எந்த வித பாதுகாப்பு வசதியோ, சரியானா ஏற்பாடுகளோ செய்யவில்லை என்பது ரசிகர்களின் மனக்குமுறல். ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறிய ஏஆர் ரகுமான் இதனை கவனிப்பாரா?

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com