தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்தி கடந்த 2007 ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, கோ, மெட்ராஸ், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியான மிக பிரம்மாண்டமான படைப்பான மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். வள்ளவரையன் வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.
அதனை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் நடிகர் கார்த்தி அடுத்ததாக தனது 25 - வது படமான ஜப்பான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. 'சகுனி', 'காஷ்மோரா', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி', 'சுல்தான்' என 5 சூப்பர்ஹிட் திரைப்படங்களைத் தொடர்ந்து 6-வது முறையாக கார்த்தியின் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிறது. ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் கார்த்தி சிவப்பு ஜம்ப்சூட் அணிந்து சோபாவில் அமர்ந்திருப்பது போன்றும் அதற்குப் பின்னால் சுவரில், ஒரு ஃபெரேமில் கார்த்தியின் புகைப்படம் தொங்குகிறது. இந்த போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-- சுஜிதா ஜோதி
இதையும் படிக்க : சரியாக செயல்படாத கட்சி தான் அதிமுக...குற்றம்சாட்டும் டிடிவி!