புகைப்பிடிக்கும் காட்சி குறித்து தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் தர வாய்ப்பு வழங்கவில்லை என நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம், நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யவும், புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் தனித் தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இவர்கள் இருவரும் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது, நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன்,
சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம் விநியோக கட்டுப்பாட்டு சட்டம் 2003 பிரிவு 5 ன் கீழ் இந்த புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், இந்த விதி புகையிலை பொருட்களின் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் அல்லது விநியோகஸ்தர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிட்டார்.
சிகரெட்டை விளம்பரபடுத்தவில்லை என்றும், விளம்பரம் என்று கூறப்படும் காட்சி, படத்தின் தயாரிப்பாளருக்கு எதிராகவோ அல்லது அதில் உள்ள கலைஞர்களுக்கு எதிராகவோ பொறுந்தாது என வாதிட்டார்.
ஏற்கனவே படம் தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தணிக்கை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார் புகார் தருவதற்கு முன்பு விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்றும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்