எங்களை குறைசொல்லும் முன் கண்ணாடியை பாருங்கள்.! நூலக ஆர்டர் தொடர்பாக மோதிக்கொள்ளும் திமுக,அதிமுக கட்சியினர்.! 

எங்களை குறைசொல்லும் முன் கண்ணாடியை பாருங்கள்.! நூலக ஆர்டர் தொடர்பாக மோதிக்கொள்ளும் திமுக,அதிமுக கட்சியினர்.! 

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரும் தகவலாக இருப்பது அரசு நூலகங்களில் திமுக கட்சி பத்திரிகை மற்றும் அதன் ஆதரவு பத்திரிகைகளை வாங்குமாறு மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எழுதியுள்ள கடிதம் தான். 

அந்த கடிதத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலிக்கு ஒரு வருட சந்தாவாக ரூ.1880 உடனே காசோலை வழியாக செலுத்தி நாளிதழ்களை வாங்கிக் கொள்ளுமாறும், மீதமுள்ள 2 நாளிதழ்களை உள்ளூர் முகவரிடம் பெற்று பயன்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நூலகங்களில் ஆண்டு சந்தா கட்டி தினகரன் நாளிதழை வாங்க வேண்டும். மீதமுள்ள 2 நாளிதழ்களை உள்ளூர் முகவரிடம் வாங்கிக் கொள்ளலாம். குங்குமம், தமிழ் முரசு உள்ளிட்ட இதழ்களையும் வாங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்த கடிதம் சர்ச்சையாகிய நிலையில் இறுகுறித்து அதிமுகவின் தகவல் தொழிநுட்ப அணியின் மாநில செயலாளர் சிங்கை ராமசந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில்  “திமுக ஆட்சி என்றாலே அரசு பணத்தை வைத்து குடும்ப நிறுவனங்களை ஏகபோகமாக வளர்ப்பார்கள் என்பதுதான் வரலாறு! இந்தக் கொரோனா நிதிநெருக்கடியிலும் அரசுப்பணத்தில் வரிசையாக உங்கள் குடும்ப பத்திரிக்கைகளை வாங்க உத்தரவிட்டிருப்பது எவ்வளவு அதிகார துஷ்பிரயோகச்செயல் ஸ்டாலின் அவர்களே?” என்று கூறியிருந்தார்.

மேலும் இதற்கு திமுக தரப்பிலோ,அரசின் தரப்பிலோ பதில் கூறாத நிலையில் சமூகவலைத்தளங்களிலும் இதை மையமாக வைத்து திமுகவை விமர்சித்துவருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த விவகாரத்தில் அதிமுக ஒன்றும் யோக்கியம் இல்லை. இவர்கள்  ஆட்சிக்கு வந்தால் இவர்களுக்கு ஆதரவான பத்திரிகைகளை வாங்க சொல்வதும், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு ஆதரவான பத்திரிகைகள் வாங்கச்சொல்வதும் எப்போதும் நடைபெறுவது தான் என்று கூறியுள்ளார்கள். 

மேலும் கடந்த அதிமுக ஆட்சியின்போது மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு விழாவிற்கு 19.07.2018 அன்று சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக வரவேற்றமைக்கு காலைக்கதிர் மற்றும் நமது அம்மா நாளிதழில் வெளியிட்டமைக்கு விளம்பர கட்டணம் ரூ.25,200/ மற்றும் நமது அம்மா நாளிதழுக்கு ரூ.15,750/ வழங்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது என மேட்டூர் நகராட்சி மன்ற தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆதாரங்களும் வெளியாகியுள்ளது. இதை குறிப்பிட்டு சில திமுகவினர் எங்களை குறைசொல்லும் முன் கண்ணாடியை பாருங்கள் என்று அதிமுகவினரை விமர்சித்து  வருகிறார்கள். 

இது பற்றி சிலர் கூறும்போது பொதுவாக கட்சி அல்லது ஆட்சியின் தலைமையிலிருந்து இது போன்ற உத்தரவுகள் எதுவும் வராது. ஆனால் கீழ் நிலையில் இருக்கும் அதிகாரிகள் ஆட்சி மாறியதும் இதுபோன்று உத்தரவுகளை கூறி ஆட்சிக்கு நெருக்கமானவர்களாக காட்டிக்கொளவார்கள் எனக் கூறினார்.