மின்கம்பி அறுந்து விழுந்ததில் பற்றி எரிந்த தைல மரக்காட்டை தீப்பரவும் முன்னதாக தீயணைப்புத் துறையினருக்காக காத்திருக்காமல் இளைஞர்களே தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்துள்ளனர்.
சேதமடைந்த கம்பிகள்:
கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜாப் புயல் பாதிப்புகளின் போது சேதமடைந்த மின் கம்பிகளை முழுமையாக சீரமைத்து புதிய மின்கம்பிகள் மாற்றாமல் தற்காலிகமாக சரிசெய்து மின்பாதைகள் சரிசெய்யப்பட்டன. கஜா புயல் கடந்து சென்று நான்கு ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும், அதில் சேதமடைந்த மின் கம்பிகளை மாற்றி அமைக்காமல், அப்படியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மின் கசிவு:
இதன்காரணமாக மாதம் இரு முறையாவது மின் கம்பிகள் அறுந்து விழுந்து விவசாய நிலங்கள் மற்றும் தைல மரக்காடுகள் தீப்பற்றி எரியும் சம்பவம் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு ஊராட்சியில் உள்ள தைல மரக்காட்டின் மேல் சென்ற மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில், தைல மரக் காட்டில் இருந்த புற்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன.
காத்திராமல்:
இதைக்கண்ட அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் தீ பற்றி அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவி பெரும் விபத்தாகி விடும் என்ற காரணத்தால் ஆலங்காடு கிராமத்து இளைஞர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு உள்ளாகவே அப்பகுதி இளைஞர்கள் தீயை அணைத்து பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.
கோரிக்கை:
இது போன்ற விபத்துக்கள் இனிமேலும் ஏற்படாமல் இருக்க கஜா புயல் பாதிப்பினால் சேதம் அடைந்த மின் கம்பிகளையும் மின் பாதைகளையும் உடனடியாக சரி செய்து புதிய மின் கம்பிகளை பொறுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.