திருவண்ணாமலை: தீப மலையில் திடீர் தீ; கண்டுகொள்ளாத வனத்துறை; களமிறங்கிய சமூக ஆர்வலர்கள்!

திருவண்ணாமலை: தீப மலையில் திடீர் தீ; கண்டுகொள்ளாத வனத்துறை; களமிறங்கிய சமூக ஆர்வலர்கள்!
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மரங்கள் மூலிகைச் செடிகள் எரிந்து தீயில் கருகின. இதனை வனத்துறையினர் கண்டு கொள்ளாததால் சமூக ஆர்வலர்கள் தாங்களே களத்தில் இறங்கி தீயை அணைத்துள்ளனர். 

சிவ பெருமானின் பஞ்சபூத வழிபாட்டு தளங்களில் நெருப்பை வழிபடும் தளமாக விளங்கும் திருவண்ணாமலை மிகவும் பிரசித்திப்பெற்றது. இம்மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் இங்கிருக்கும் தீப மலையை பக்தர்கள் சுற்றி வந்து வழிபாடு நடத்துகின்றனர்.  சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட தீப மலை 2,668 அடி உயரம் கொண்டதாகும்.

இந்நிலையில் இந்த மலைக்கு நேற்று சில மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர். மேலும் நேற்று பலத்த காற்று வீசியதால் தீப மலையில் தீ  அதிவேகமாக பரவ தொடங்கியது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனத் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மலைக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீயை சுமார் ஐந்து மணி நேரம் போராடி அவர்கள் அணைத்தனர். இந்த தீ விபத்தில் மலையில் பல மரங்களும் மூலிகைச் செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளன.

மேலும், தீப மலையில் சமூக விரோதிகள் சிலர் மலைக்குச் சென்று தீ வைத்து தப்பி செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாகவும், இதுபோல சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வனத்துறையினரும் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com