சிவகாசி: ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் அழிந்து வரும் பாரம்பரிய பனைமரத்தை மீட்டெடுக்க, பனை விதை நடும் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சுமார் 500 மாணவ- மாணவிகள் திரண்டு வந்து, ஆர்வத்துடன் பங்கேற்று 2 ஆயிரம் பனை விதைகளை போட்டி போட்டுக் கொண்டு நட்டனர்.
பனை விதைகளை நட்ட மாணவ- மாணவிகள் தரப்பில், “தமிழக அரசு அழிந்து வரும் பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தாங்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு தரும் விதமாக பனை விதைகளை நட்டதாகவும், பனைமரம் என்பது நாட்டுக்கு அவசியமான ஒன்று எனவும், நீர் சார்ந்த இடங்களில் மண்ணரிப்பு ஏற்படாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் அழிந்து வரும் நிலையில் உள்ள பனை மரத்தை மீட்டெடுக்கவும், பனை மரத்தின் வேரிலிருந்து பனை இலை வரை அனைத்துமே எதுவும் கழிவு இன்றி பயன்படுத்தப்படுவதால் அதன் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்” என்றனர்.
பாரம்பரிய பனை மரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், பனை ஓலையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் எளிதில் கெட்டுப் போவதில்லை என்றும், பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், வெல்லம், பனங்கிழங்கு போன்றவை நம் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்களாக விளங்குவதாகவும், பழந்தமிழர்களின் வாழ்வில் பனைமரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டதாகவும், யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!! என்ற பழமொழி கருத்து உயர்ந்து நிற்கும் பனை மரத்திற்கும் பொருந்தும் என இதன் ஏற்பாட்டளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.