பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டியில் கண்ணப்பன் அலாயிஸ் என்ற இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுற்று சூழல் மாசு ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இத்தொழிற்சாலை செயல்பட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் 35 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தையும், 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் இரும்பு உருக்கு ஆலை செயல்பட தற்காலிக தடை விதித்தார்.
இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனியாருக்கு சாதகமாக செயல்பட்டு இரும்பு உருக்கு ஆலையை மீண்டும் திறக்க முயல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் நேற்று காலை அனுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்லடத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிட்டு உண்ணாவிர போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது பல்லடம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சௌமியா தலைமையிலான பல்லடம் போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பொது மக்களுக்கு வழங்க வேண்டிய உணவும் நீரும் கூட காவல் துறையால் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள் தனியார் திருமண மண்டபத்திலிருந்து வெளியேற மறுத்து திருமண மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் கூறுகையில், போலீசார் தங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை தரவில்லை என்றும் மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த இரும்பு உருக்கு ஆலைக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் எனவே இந்நிறுவனத்தை நிரந்தரமாக மூடும் உத்தரவு வழங்கும் வரை தாங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.