அரியலூரில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த மாடுகள் மிரண்டு ஓடின. அப்போது அந்த பகுதியில் இரண்டு மிருகங்கள் போன்று நிற்பதைக் கண்டு பாலகிருஷ்ணன் அலறி ஓடி உள்ளார். அப்போது அந்த மிருகங்கள் அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் புகுந்து ஓடியுள்ளன. இதனை அடுத்து கிராம வாசிகள் ஆண்டிமடம் போலீசாருக்கும், மாவட்ட வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த மக்கள் வயல்வெளிகளில் சில கால் தடங்கள் இருப்பதும் அது ஒருவேளை புலி (அ) சிறுத்தை கால் தடமாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த கால் தடங்கள் புலியின் கால் தடங்கள் இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், வேறு ஏதேனும் விலங்குகளின் கால் தடமாக இருக்கலாம் என்று அதன் பாத சுவடுகளை பதிவு செய்து ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர்.
புலி நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் கடலூர் மாவட்டத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் ஆண்டிமடம் பகுதியில் திருகோணம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் இருந்து புலி போன்ற வனவிலங்குகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால் நடுவில் உள்ள கிராமங்களை தாண்டி விலங்குகள் வருவதற்கான வாய்ப்பு இல்லை என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். எனினும் இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மர்ம விலங்குகள் நடமாட்டம் குறித்து வனத்துறை, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபாட்டுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.