விழிப்புணர்வு கோலப்போட்டி
தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை ரத்தினசாமி நகரில் பெண்கள் கலந்து கொண்ட கோலப் போட்டி நடைபெற்றது.
வன்முறைகளுக்கு எதிரான வாசகங்கள்
இதில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலான கோலங்களை வரைந்தனர், மேலும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் கல்வி அவசியம், பெண்கள் வன்முறையை ஒழிப்போம், ஆண்-பெண் சமம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு 1098 என்ற இலவச உதவி எண் பயன்படுத்த வேண்டும், குழந்தை திருமணத்தை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்களை வண்ணக் கோலத்தில் எழுதி இருந்தனர்.
சிறந்த கோலங்களுக்கு பரிசு
போக்குவரத்துக் காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தன்னார்வ தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதில் சிறப்பாக கோலமிட்டவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர்.