சட்ட விரோதமான செங்கற்சூளைகள்... உத்தரவிட்ட நீதிமன்றம்!!!

சட்ட விரோதமான செங்கற்சூளைகள்... உத்தரவிட்ட நீதிமன்றம்!!!
Published on
Updated on
1 min read

கனிம வளத்துறை விதித்த அபராதத்தை முழுமையாக செலுத்தும் பட்சத்தில், கோவை தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட  செங்கற்சூளைகளில் இருந்து செங்கற்களை எடுத்து செல்ல தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மூட உத்தரவு:

யானைகள் வழித்தடமான கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில், சட்டவிரோதமாக செங்கற்சூளைகள் செயல்பட்டு வருவதாக வெளியான செய்தியின் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்,  தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.  சட்டவிரோதமாக செயல்பட்ட செங்கற்சூளைகளை மூடவும் உத்தரவிட்டு இருந்தது.

கோரிக்கை:

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோரை கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செங்கற்சூளை உரிமையாளர்கள் தரப்பில், கனிம வளத்துறை விதித்துள்ள அபராதத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும், முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ள செங்கற்களை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

எதிர்ப்பு:

ஆனால்,  ஆயிரத்து 130 கோடி செங்கற்கள் தயாரிக்கப்பட்டு செங்கற்சூளைகளில் இருக்கின்றன என்றும், செங்கல் தயாரிப்பதற்காக 3 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பில் தோண்டப்பட்டுள்ள குழிகளை நிரப்பாமல் அந்த செங்கற்களை எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனுமதி:

இரு தரப்பு வாதங்களை கேட்ட தீர்ப்பாயம், கனிம வளத்துறை பிறப்பித்த உத்தரவின் படி செலுத்த வேண்டிய அபராதத் தொகையை முழுமையாக செலுத்திவிட்டு,  ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள செங்கற்களை எடுத்து செல்லலாம் என செங்கற்சூளை உரிமையாளர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு:

அதேசமயம்,  செங்கற்களை தவிர வேறு எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.  தீர்ப்பாய உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை ஏப்ரல் 17ம் தேதி  தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம்,   விசாரணையை  தள்ளிவைத்தது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com