யானைகள் நடமாட்டம், "வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" வனத்துறையினர் எச்சரிக்கை!

யானைகள் நடமாட்டம், "வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" வனத்துறையினர் எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள    செண்பகத் தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான இங்கு நீர் வீழ்ச்சிகள் உள்ளதால் அதிக அளவிலான பொதுமக்களும் அருகில் உள்ள சுற்றுலா பயணிகளும் பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிகின்றனர்.

இந்த வனப் பகுதியில் ஏராளமான யானைகள் மற்றும் புலிகள், சிறுத்தைகள், கரடிகள் காட்டெருமைகள் பெரிய அளவிலான மலைப்பாம்புகள் ,ராஜ நாகங்கள் என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக அதிக அளவில் யானைகள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் மலையின் உச்சி பகுதியில் வசித்து வரும் யானை கூட்டம் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வெளிவரும். யானைகள் அடிவாரப் பகுதிகளில் சுற்றிதிரிந்து விட்டு அதிகாலை நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும். ஆனால் கடந்த இரு தினங்களாக செண்பகத் தோப்பு மலை அடிவாரத்தில் ஆறு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் ஒன்று சுற்றி தெரிகிறது. மாலை 4 மணி அளவில் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்து அடிவாரத்தில் மக்கள் சென்றுவரும் பாதையில் இந்த யானைகள் முகாம் இட்டுள்ளன.

இதுகுறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் கார்த்திக் கூறும் போது கடந்த சில தினங்களாக யானை கூட்டம் ஒன்று செண்பகத்தோப்பு முதல் பாலத்தின் அருகே சுற்றி திரிகிறது. இது விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் ஆகியோர் அவ்வப்போது சென்று வரும் பாதையாகும். எனவே அனுமதி இன்றி யாரும் செண்பகத்தோப்பு பகுதிக்கு  செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்க வனத்துறை சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com