பெற்றோர் எதிர்ப்பால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் விபரீத முடிவு!
பெரியகுளத்தில் பெற்றோரின் எதிர்ப்பால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதல் இணையர்கள் மரணத்தில் இணைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காந்திநகர் பகுதியில் வசித்து வரும் வேலவர் மாலையம்மா தம்பதியினரின் மூன்றாவது மகன் மாரிமுத்து (22). அதே பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவரின் மகள் மகாலட்சுமி. மகாலட்சுமி மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாரிமுத்து மற்றும் மகாலட்சுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமியின் பெற்றோர் மாரிமுத்து மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரிமுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியில் வந்த மாரிமுத்து, மகாலட்சுமியுடனான தனது காதலை மீண்டும் தொடர்ந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வெகுநேரம் ஆகியும் மகாலட்சுமி வீடு திரும்பவில்லை. மாரிமுத்துவையும் காணவில்லை. இதனை தொடர்நது இரண்டு தரப்பு பெற்றோரும் அவர்களை தேடி வந்தனர்.
இதனையடுத்த இன்று காந்திநகர் அருகே உள்ள மாந்தோப்பில் மாரிமுத்து மற்றும் மகாலட்சுமி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மகாலட்சுமிக்கு 18 வயது முழுமையடையவில்லை எனவும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் திருமணம் முடிப்பதில் பல்வேறு தடங்கல்கள் இருந்து வந்ததால் மனமுடைந்த காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
காதல் இணையர்கள் திருமணத்திற்கு தடையாக பெற்றோர்களும் சமூகமும் இருந்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.