இந்தியாவில் உள்ள 128 விமான நிலைய ஆணைய ஊழியா்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் கொடுக்க வேண்டிய போனஸ் தொகையை இதுவரை வழங்கவில்லை. அதன் பின்பு 2019 முதல் 2021 ஆகிய 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக போனஸ் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே வழங்க வேண்டிய 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை போனஸ் தொகையை வழங்க கோரி இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள் தொழிற்சங்கம் மூலமாக மத்திய அரசிடம் கேட்டனர்.
மேலும் படிக்க: பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட சிறுவன் விஞ்ஞானி ஆன கதை!
மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் வழங்க வேண்டிய 2 ஆண்டு போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. இதன்படி விமான நிலைய ஊழியர்கள் போனஸ்காக காத்திருந்தனர். ஆனால் மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி தற்போது போனஸ் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். முதற்கட்டமாக சென்னை உள்பட 128 விமான நிலையங்களிலும் ஒரு மணி நேர ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்ட போராட்டம் பற்றி முடிவு செய்யப்படும் என்று சென்னை விமான நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. அனைத்து பணிகளும் வழக்கம் போல் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.