100 நாள் வேலை... முறைகேடு செய்த ஊராட்சி தலைவர்!!!

100 நாள் வேலை... முறைகேடு செய்த ஊராட்சி தலைவர்!!!
Published on
Updated on
1 min read

கூட்டுறவு வங்கி ஊழியர்கள், வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் பெயரில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து ஊராட்சி நிதி முறைகேடு செய்த கண்டதேவி ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த கருப்பையா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

மனுவில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, கண்டதேவி ஊராட்சியின் 2வது வார்டு உறுப்பினராக உள்ளதாகவும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு நபர்களுக்கு வேலைக்காக பதிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்100 நாள் வேலை திட்டத்தில் எங்கள் ஊராட்சித் தலைவரின் கணவர் பெயர், அவரது தாயார் உடன்பிறந்தவர்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் போன்றவர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் அது மட்டுமல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் வேலை பார்த்து வரும் நபர்களின் பெயர்களிலும் அட்டைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர்கள் வேலை செய்ததாக பொய்யாக கணக்கு காண்பித்து ஊராட்சிக்கு சொந்தமான ஏராளமான நிதியை மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும் இதே போல ஊராட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு திட்டத்தில் இலவச வீடுகளுக்கும் பரிந்துரை செய்து சட்ட விதிமுறைகளுக்கு மாறாக வீடுகள் கட்டி வருகின்றனர் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறைகேடுகள் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையாக விசாரிக்கவில்லை எனவும் எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்து வரும் கண்டதேவி ஊராட்சி தலைவர் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் எனவே, மனுதாரரின் கோரிக்கை மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரித்து 12 வாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com