சேலத்தில் கொடிக்கட்டி பறக்கும் லாட்டரி விற்பனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லாட்டரி விற்பனையானது கொடிக்கட்டி பறக்கிறது.
இந்நிலையில், சேலம் மாநகரில் கருங்கல்பட்டி, களரம்பட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், தேநீர் கடைகளில் எவ்வித அச்சமும் இன்றி, லாட்டரி விற்பனை நடைபெறுவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி, கடந்த வாரம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் உலாவவிட்டார். மேலும் சேலம் மாநகரில் சட்டவிரோத மது மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்க பல்வேறு போராட்டங்களையும் இவர் முன்னெடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் பெரியசாமி எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு தாதகாப்பட்டி பகுதியில் சென்றபோது, அவரை வழிமறித்த லாட்டரி விற்பனையாளர்கள் அருண், சதீஷ் உள்ளிட்டோர் இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரின் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி ரத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையியில், சேலம் மாநகரில் காவல்துறையினரின் உதவியோடுதான் லாட்டரி விற்பனை நடப்பதாகவும், போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே பெரியசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சேலம் மாநகர காவல் துறையை கண்டித்தும் பெரியசாமி மீது நிகழ்ந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்தும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாநகரில் எவ்வித அச்சமும் இன்றி நடைபெற்று வந்த லாட்டரி விற்பனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமையல் செய்து போராட்டம்!