பெல்ஜியத்தை சேர்ந்த குண்டெர் உவென்ட்ஸ் என்பவர் சிறுவயதாக இருந்தபோது (அதாவது 7 வயது), மரியா வெர்லிண்டேன் என்ற ஆசிரியர் பள்ளியில் சக மாணவர்கள் முன்பு அவரை அடித்து அவமானப்படுத்தி உள்ளார்.
இந்த சம்பவத்தை அப்படியே மனதில் வைத்து வஞ்சம் தீர்ப்பதற்காக கோபத்துடனே இருந்து வந்த குண்டெர் உவென்ட்ஸ் 30 வருடங்களுக்கு பிறகு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அதற்கு பழிதீர்த்து உள்ளார்.
சிறுவயதில் தன்னை அவமானம் படுத்திய ஆசிரியர் மரியா வெர்லிண்டேனை, கடந்த ஆண்டு கண்டுபிடித்து 101 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் குண்டெர் உவென்ட்ஸ். இது குறித்து குண்டெர் தனது நண்பனிடம் கூற, ஆனால் அவரின் நண்பரோ இந்த விஷயத்தை போலீசாரிடம் கூறிவிட்டார்.
இந்த தகவலின் பேரில் உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த ரத்த மாதிரியை கொண்டு குண்டெர் உவென்ட்ஸ்-யிடம் டிஎன்ஏ சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர் குற்றவாளி என நிரூபணமானது. கிட்டத்தட்ட கொலை நடந்து 16 மாதங்களுக்கு பிறகு இவரை போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர்.
அவரிடம் போலீசார் தொடந்து நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் "சிறிய வயதில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை பழிவாங்குவதற்காக கொலை செய்ததாக குண்டெர் உவென்ட்ஸ்” தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.