அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்து வருகின்றனர்.
விபத்து:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தேவர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த பத்தாம் தேதி பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது நவீன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
அறுவை சிகிச்சை:
இதில் படுகாயம் அடைந்த நவீன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அக்னிபஜார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் நவீனை பரிசோதித்த மருத்துவர்கள் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தாடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சாலை மறியல்:
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் 12 மணி வரை அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருந்த நவீன் நேற்று நள்ளிரவு திடீரென்று இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருந்ததாக கூறிய மருத்துவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு நவீன் இறந்து விட்டதாக தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தற்போது மருத்துவமனை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகம்:
சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி ஆய்வாளர் பிரேம்குமார் கீரனூர் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலவன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து உறவினர்கள் கூறுகையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவருக்கு எந்தெந்த சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற முழு விவரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இதையும் படிக்க: திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...!!