வெளிநாட்டிலிருந்து விலை உயர்ந்த கற்களை இறக்குமதி செய்ததில் மோசடி செய்த வழக்கறிஞருக்கு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து விலை உயர்ந்த கற்களை இறக்குமதி செய்த போது அதன் மதிப்பை குறைத்து காட்டி சுங்க வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜாகீர் உசேன் என்பவர் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டம் எனப்படும் காபிபோசா சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தன்னை விடுவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது,
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அப்துல் ஹமீது, பொய்யான வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த தவறும் செய்யாத நிலையில் தடுப்புக் காவலில் சிறையிலடைக்கப்பட்டதாகவும், அறிவுரைக் கழகத்தில் அளித்த விண்ணப்பத்தை குறித்த காலத்தில் பரிசீலிக்கவில்லை என்றும் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தடுப்பு காவலில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அளித்த விண்ணப்பத்தை, அறிவுரைக் கழகம் தாமதமாக பரிசீலித்துள்ளதாகக் கூறி, மனுதாரரை காபிபோசா சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
மேலும், வேறு வழக்குகளில் அவர் தேவைப்படவில்லை என்றால், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.