தென்காசி மாவட்டம் சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் ராகு, கேது சிலைகள் திருடபட்ட வழக்கில், கோவிலில் எந்த சிலையும் திருட்டு போகவில்லை எனவும் சிலைகளை இடமாற்றி வைத்த கோவில் பூசாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "எங்கள் கிராமத்தில் உள்ள பழமையான சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் முறையான அனுமதியின்றி மூலவர் லிங்கம் மற்றும் நந்தியை பெயர்த்து எடுத்து உயர்த்தி வைத்துள்ளனர். சனி பகவான் சிலையை பெயர்த்து இடம் மாற்றியுள்ளனர். சூரியன் மற்றும் சந்திரன் சிலையை எடுத்து வெளியில் வைத்துள்ளனர்.
ராகு, கேது சிலைகளை காணவில்லை. எனவே, ராகு, கேது சிலைகளை கண்டறிந்து அதன் பழைய இடத்தில் மீண்டும் வைக்கவும், சிலை திருட்டில் ஈடுபட்ட சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில், கோவில் சிலைகள் ஏதும் திருட்டுப் போகவில்லை எனவும் அங்கு பணியாற்றிய கோவில் பூசாரி சில சிலைகளை இடங்கள் மாற்றி வைத்துள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மனுதாரர் தரப்பில், சம்பந்தப்பட்ட பூசாரி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் கோவில் நகைகள் திருடப்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாகவும் மேலும் கோவிலில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், கோவில் நகைகள் திருடு போனதாக இந்து அறநிலையத்துறை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்து வழக்கு குறித்து மீண்டும் இந்து அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரனை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க:சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை: அறிவிப்பு பலகை அகற்றம்!