கட்டுப்பாட்டை இழந்த மின்சார பஸ் அடுத்தடுத்து சென்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள், சாலையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று இரவு பிரேக் பழுதானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மின்சார பஸ் ஒன்று சாலையில் வேகமாக சென்றது. டாட் மில் கிராஸ் ரோடு பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த பஸ், முன்னே சென்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இப்படியே அடுத்தடுத்து மோதி வந்த நிலையில், சாலையோரம் கூட்டமாக நின்றுக்கொடிருந்த மக்கள் மீதும் மோதியது. பின்னர் இறுதியாக டேங்கர் லாரி மீது மோதி நின்றது.
படப்பாணியில் நடந்த இந்த கோர விபத்தில் கூட்டமாக நின்றுக்கொண்டிருந்த 6 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 12 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இவ்வளவு பெரிய கோர விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.