கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் சுங்கசாவடி ஊழியரை அடித்து கொலை செய்த நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதி நகரில் பெங்களூரு மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் பெங்களூருவில் இருந்து நான்கு பேர் ஒரு காரில் இந்த சுங்கச்சாவடி வழியாக சென்றபோது, அங்கு செயலி மூலமாக பணம் வசூல் ஆன பிறகும் வாகனங்கள் கடந்து செல்ல காலதாமதம் ஆகி உள்ளது.
இதனால் காரில் இருந்த நான்கு பேர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, இரு தரப்பும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு கூடியிருந்த உள்ளூர் மக்கள் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக காரில் வந்த நான்கு பேரை கடுமையாக தாக்கி விரட்டி உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் சுங்கச்சாவடி அருகே சுமார் 200 மீட்டர் தொலைவில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு சுங்கச்சாவடி ஊழியரான பவன் குமார் மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் தங்கள் பணியை முடித்துவிட்டு வெளியே வர காத்திருந்தனர். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் பவன் குமார் மற்றும் மஞ்சுநாத் ஆகிய இருவரும் உணவு இடைவேளைக்காக சுங்கச்சாவடியில் இருந்து வெளியே வந்த போது, அங்கு மறைவில் காத்திருந்த நான்கு பேர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு இருவரையும் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் பவன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மஞ்சுநாத் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுங்கச்சாவடி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளின் காரின் எண்ணை கண்டுபிடித்துள்ள காவல் துறையினர் நான்கு பேரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; காதலன் கொலை!