கேரளம் மாநிலம் களமச்சேரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 36 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழ்நாடு போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், கேரளா எல்லையில் அமைந்துள்ள பத்து சோதனை சாவடிகளில் தமிழக போலீசார் தானியங்கி கேமரா உதவியுடன் 24 மணி நேரம் கண்காணித்து வருகின்றனர். சோதனை சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் ஏ.டி.எஸ்.பி தெய்வம் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர். மேலும், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் மற்றும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புளியரையில் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் அரசு பேருந்துகள் தனியார் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். கோவையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.