வியாபாரியை தாக்கிய எஸ்.ஐ.; ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்!

Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி காவல்துறையினரால் தாக்கப்பட்ட வெங்காய வியாபாரிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி வ.உ.சி நகரைச் சேர்ந்த அஸ்லம் முஸ்தபா தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018ம் ஆண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே மினி வேனில் வெங்காய வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த துணை ஆய்வாளர் பாலமுரளி, ஏட்டு முருகன் ஆகியோர் வியாபாரம் செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசியும், வாகனத்தை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்திற்கு வந்த தனது சகோதரர் சதாம் உசேன், உறவினர் செய்யது முஸ்தபா ஆகியோரையும், தன்னையும் காவல்துரையினர் அவமரியாதையாக நடத்தியும், பணம், செல்போனை பறித்துக்கொண்டதாகவும், உடையை கழற்றி அவதூறாக பேசி, பூட்ஸ் காலால் மிதித்து லத்தியால் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததால், தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் வி.கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில், சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது. நிரூபணமாவதாக கூறி,  மனுதாரருக்கு இழப்பீடாக ரூபாய் இரண்டு லட்சமும், மனுதாரரின் சகோதரர் சதாம் உசேன், உறவினர் செய்யது முஸ்தபா ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அப்போதைய கள்ளக்குறிச்சி ஆய்வாளர் விஜயகுமார், துணை ஆய்வாளர்கள் பாலமுரளி, புவனேஸ்வரி, ஏட்டு முருகன், காவல் அதிகாரி அசோக்குமார் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com