மும்பை அருகே ஓடும் ரயிலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்த ஜெய்ப்பூர் மும்பை விரைவு ரயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் (RPF) சேத்தன் சிங் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த போது காலை 6 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்வில் ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.
இதையும் படிக்க : முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
இதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர், தஹிசார் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்ப முயன்ற போது, காவல் துறையினர் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த மும்பை ரயில்வே கோட்ட மேலாளர் நீரஜ்குமார், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.