சென்னையில் போக்சோ குற்றவாளி தப்பியோடிய வழக்கில் பெண் காவலர் உட்பட இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ராஜா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்தில் ராஜா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கோக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படைத்து சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து நேற்றைய முன் தினம் செந்தில் ராஜாவை மருத்துவ பரிசோதனைக்காக புழல் சிறையில் இருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது கழிவறைக்கு செல்வதாக செந்தில் ராஜா கூறிவிட்டு பின்பக்கமாக சுவர் ஏறி குறித்து தப்பித்து சென்று உள்ளார். தப்பி சென்ற குற்றவாளி செந்தில் ராஜாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மூன்று நாட்கள் ஆகியும் செந்தில் ராஜாவை கண்டுபிடிக்காத காரணத்தினால் அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் லாவன்யா மற்றும் காவலர் சுரேஷ் ஆகிய இரண்டு பேரை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தற்காலிகமாக பணியிடம் நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் குற்றவாளி செந்தில் ராஜாவை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.