திருப்பூர் விவகாரம் : முன்விரோதம் காரணம்? திடீர் சாலை மறியலில் பாஜகவினர்!

திருப்பூர் விவகாரம் : முன்விரோதம் காரணம்? திடீர் சாலை மறியலில் பாஜகவினர்!
Published on
Updated on
2 min read

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருடன் தூத்துக்குடியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வெங்கடேசனை பணியில் இருந்து நீக்கியுள்ளார் செந்தில்குமார். 

இந்நிலையில் செந்தில் குமாரின் வீட்டின் அருகே, வெங்கடேசன் தனது கூட்டாளிகளுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட செந்தில்குமார், அவரது தாயார், சகோதரர் மற்றும் சித்தி ஆகிய 4 பேரையும், வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். 

தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

படுகொலை சம்பவத்தைக் கண்டித்து, எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு, கொலை மாநிலமாக மாறி வருவதாக கடுமையாக சாடியுள்ளார்.

குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,  காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

சமூக சீரழிவு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைச்சலுக்கு காரணமான, மது அரக்கனுக்கு முடிவு கட்டுவது எப்போது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் நாள்தோறும்  கொலை, கொள்ளை தலைவிரித்தாடுகிறது என்றும், சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கோவை -,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com