சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போதைப் பொருள் தடுப்புக்கான நடவடிக்கையின் கீழ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி, பதுக்கி மற்றும் விற்பனை செய்து வருபவர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ராயபுரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக ராயபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் நேற்று ராயபுரம், ஜி.எம் பேட்டை பகுதியில் ரகசிய கண்காணிப்பு மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த வெளிநாட்டவரைப் பிடித்து சோதனை நடத்தினர்.
சோதனையில் அந்த நபர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் அந்த நபர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சிபுல்கே (34) என்பதும், செல்போன் செயலி மூலம் சென்னையில் சிபுல்கே பல்வேறு நபர்களுக்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிபுல்கேவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 60 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் மற்றும் செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.