சென்னை அண்ணா சாலை கேசினோ திரையரங்கம் எதிரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வங்கிக் கிளையின் வாடிக்கையாளர்கள், வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தபோது வரவில்லை எனவும் ஆனால் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக புகார் அளித்து வந்தனர். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சார்பில் குழு அமைக்கப்பட்டு ஏ.டி.எம்-ல் உள்ள சி.சி.டி.வி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ஏ.டி.எம் மையத்திற்குள் வரும் நபர் ஒருவர், ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வரும் வழியின் உட்புறம் காகிதம் ஒட்டிக்கொள்ளும் வகையில் ஏதோ ஒன்றை ஒட்டிவிட்டுச் செல்வது பதிவாகியிருந்தது. அவரைத் தொடர்ந்து பணம் எடுக்க வருபவர்கள் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முயலும்போது பணம் வராமல் திரும்பிச் செல்வதும், அவர்கள் சென்ற பிறகு மீண்டும் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழையும் நபர், தான் ஒட்டிய பொருளை மீண்டும் எடுக்கும்போது உள்ளே சிக்கியிருந்த பணம் வெளியே வந்தவுடன் அவர் அதை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இது குறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், இதுவரை வாடிக்கையாளர்களின் 28 ஆயிரத்து 400 ரூபாய் பணம் இந்த நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், அந்த கொள்ளையன் வங்கியின் ஊழியரா அல்லது வாடிக்கையாளரா என்பதை உறுதிபடுத்தும் வகையில் வங்கி அதிகாரிகள் மூலமே குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடம் சிந்தாதிரிப்பேட்டை காவல் எல்லைக்குள் வருவதால், உரிய விசாரணை நடத்துமாறு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.