நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே குடும்ப அட்டை இல்லாதவருக்கு அரிசி விற்பனை செய்த ஊழியரை ஒருவர் வறுத்தெடுக்கும் காணொலி வைரலாகி வருகிறது
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உறுமன்குளம் ஊராட்சி "பெட்டைக் குளம்" கிராமத்தில் தமிழ்நாடு அரசு " நுகர்பொருள் வாணிப கழகத்தின்" கீழ் வரும் அமுதம் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது .
இந்தக் கடையில் ரேஷன் கார்டுடன் பொருள் வாங்க சென்ற பொதுமக்களிடம் கடை ஊழியர் "பொருள் இல்லை நாளை வாருங்கள்" என்று சொல்லி அனுப்பியுள்ளார். ஆனால், கடை ஊழியர், ரேஷன் கார்டுடன் விரட்டிவிட்டு, கடையில் உள்ள பொருட்களை கார்டே இல்லாதவர்களுக்கு முறைகேடாக விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே கார்டுடன் சென்று பொருள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றவர் அதைக் கண்டதும் தட்டி கேட்டு வார்த்தையால் வறுத்தெடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏமாந்த நபர் முறைகேடை தட்டிக் கேட்ட பொழுது, கடை ஊழியர் வாயில் பாக்கு போடுவதும், எதுவுமே நடக்காதது போல் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவி மெல்லுவதற்கு தயாராகி உள்ளார் .
இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக வழங்கக்கூடிய அரிசியை முறைகேடாக விற்பனை செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது.