திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி-சத்யா தம்பதிக்கு, கடந்த 19-ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. பொது வார்டில் தாயும், சேயும் இருந்த நிலையில், அருகே 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறி ஒரு பெண் பேச்சுக் கொடுத்துள்ளார். சத்யாவை வேறு வார்டுக்கு மாற்றும் போது, குழந்தையை அந்த அடையாளம் தெரியாத பெண் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சத்யா திரும்பி வந்து குழந்தையை கேட்ட போது உங்கள் மாமியாரிடம் குழந்தையை கொடுத்ததாக கூறியதால், உள்ளே சென்று பார்த்த போது குழந்தை இல்லாததால் அதிர்ச்சியடைந்த சத்யா, அப்பெண்ணை தேடிய போது அவர் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார், மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் அப்பெண் குழந்தையை மடியில் மறைத்தவாறு கடத்தி செல்வது பதிவாகி உள்ளது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தையை கடத்தி சென்ற பாண்டியம்மாள் என்பவரை இடுவம்பாளையம் பகுதியில் மடக்கிப் பிடித்து குழந்தையை மீட்டனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருமணமாகியும் இரண்டு ஆண்டுகள் குழந்தையில்லாமல் 9 மாதங்களாக கர்ப்பமாக இருந்ததாக குடும்பத்தை ஏமாற்றி வந்தவர், மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்றிரவு கடத்தப்பட்ட குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.