திருப்பூர் பாலியல் வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி..!!

திருப்பூர் பாலியல் வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி..!!
Published on
Updated on
1 min read

எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருப்பூரைச்  சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றவாளியின் குழந்தைகள் படிப்பை தொடர உரிய உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

புகாரளித்த தாய்:

திருப்பூர் மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணின் 8 வயது மகளை பக்கத்து வீட்டில் வசித்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

ஆதாரங்கள் இல்லை:

புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை  விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து  கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. 

மேல்முறையீடு:

இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

தீர்ப்பு:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, விடுதலை  உத்தரவை ரத்து செய்து , அந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்  தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.  மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10  லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், குற்றவாளியின் குடும்ப பின்னணி மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டும், குழந்தைகள் கல்வியை தொடர்வதற்கும், வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் அரசு உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி சமூக நலத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com