ஐஸ்வர்யா வீட்டில் நகை கொள்ளை... நிபந்தனை ஜாமீன்!!!

ஐஸ்வர்யா வீட்டில் நகை கொள்ளை... நிபந்தனை ஜாமீன்!!!
Published on
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை கொள்ளையடித்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

நகைகள் திருட்டு:

சென்னை போயஸ் கார்டனை சேர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.  தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வீட்டின் லாக்கரில் வைத்திருந்த கோடிக்கணக்கு மதிப்பிலான தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு மூன்று வீடுகள் மாறிய நிலையில், எந்த வீட்டிலிருந்து நகைகள் திருடப்பட்டது என தெரியவில்லை என புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

பணியாளர்கள் கைது:

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து வங்கி கணக்குகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி முக்கிய நபரான ஐஸ்வர்யா வீட்டின் பணியாளர் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து  100 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 30கிராம் வைர நகைகள், திருடிய நகைகளில் வாங்கப்பட்ட 1கோடி மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

நகை பணம் மீட்பு:

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மீதமுள்ள நகைகளை மீட்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை விசாரிக்க இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து  விசாரணை மேற்கொண்டனர்.  போலீசார் விசாரணையில் ஈஸ்வரி மற்றும் வெங்கடேஷிடம் இருந்து நகை பணம் என அனைத்தையும் மீட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்து இவர்களுடைய ஜாமின் மனுவானது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் இவர்களுடைய வழக்கறிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தொடர்ச்சியாக அவருடைய வாதங்களை முன் வைத்தார். 

ஜாமீன்:

மேலும் அனைத்து விதமான பொருட்களும் திரும்ப பெற்ற காரணத்தினால் நீதிபதி ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.  இந்த உத்தரவில் தினந்தோறும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருவரும் கையெழுத்து போட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com