இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் டிக்கெட் மோசடி... எச்சரிக்கும் காவல்துறை!!!

இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் டிக்கெட் மோசடி... எச்சரிக்கும் காவல்துறை!!!
Published on
Updated on
2 min read

இன்ஸ்டாகிராம் மூலமாக ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கூறி ரூபாய் 90ஆயிரம் மோசடி செய்த வாலிபர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்குவதற்கு டிக்கெட் விற்பனை துவங்கியவுடன் வாலிபர்கள் இரவு பகலாக காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.  கிரிக்கெட் மீதான அதீத மோகத்தின் காரணமாக டிக்கெட்டின் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலையில் சிலர் விற்பனை செய்தாலும் வாங்கிச் செல்லும் அளவிற்கு ஐபிஎல் டிக்கெட் விற்பனை கள்ளச்சந்தையில் நடைபெற்று வருகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு ஐபிஎல் விளையாட்டின் போதும் டிக்கெட் விற்பனை துவங்கியவுடன் பல பேர் கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் சம்பாதிப்பதற்காக, பல வாலிபர்களிடமும் பெண்களிடமும் பணம் கொடுத்து டிக்கெட்களை வாங்கி மோசடி நபர்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் தொடர்ந்து கண்காணித்து கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்பவர்களை கைது நடவடிக்கை மேற்கொண்டு பணம் மற்றும் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.  காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக சமூக வலைதளத்தில் ஐபிஎல் டிக்கெட் புகைப்படங்களை பதிவிட்டு, விற்பனைக்கு இருப்பதாக பலரும் பதிவுகளை வெளியிடுகின்றனர்.  அதன் மூலம் டிக்கெட் வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு அதிக விலையானாலும் பணம் கொடுத்து வாங்கிச் செல்லும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அருண் என்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடிய மே 6ஆம் தேதிக்கான ஐபிஎல் டிக்கெட்டுகளை, இன்ஸ்டாகிராம் ஐபிஎல் டிக்கெட் 2023 என்ற பக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக அறிந்து அணுகியுள்ளார்.  வினோத் யாதவ் என்பவரிடம் 20 டிக்கெட்டுகள் வேண்டும் என கூறி ஆன்லைன் கால் மூலமாக பேசி 90 ஆயிரம் ரூபாய் பணத்தை தவணை முறையில் அனுப்பியுள்ளார். பணத்தை அனுப்பியும் அவர் டிக்கெட்டுகளை தராத காரணத்தினால் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அருண் புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் வினோத் யாதவ் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில் வினோத் யாதவ் அக்கவுண்டன்ட் இன்ஸ்டியூட் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் நபர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக இதுவரை மொத்தம் 46 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 98 டிக்கெட்டுகள் மற்றும் 1லட்சத்து 52 ஆயிரத்து 700ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பொது மக்களை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com