திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அரக்கோணம் மக்களவை திமுக எம்பியாக இருப்பவர் ஜெகத்ரட்சகன். இவரது பெயரில் பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில், இன்று காலை முதலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அடையாறில் இருக்கும் எம்.பி-யின் வீடு, பாரத் பல்கலைக்கழகம், சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள ஜெகத்ரட்சகனின் அலுவலகம், நட்சத்திர விடுதியில் ரெய்டு நடந்து வருகிறது. சென்னை பூந்தமல்லியில் உள்ள சவிதா மருத்துவ கல்லூரி, வேளச்சேரி பாலாஜி மருத்துவமனை, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை உட்பட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் ஈக்காட்டுத்தாங்கல் பாளையக்காரன் தெருவில் இருக்கும் வீடு, குரோம்பேட்டையில் உள்ள உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நீடிக்கிறது. 100 க்கும் அதிகமான அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி அகரம் கிராமத்தில் உள்ள ஜெகத்ரட்சகன் எம்.பிக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இங்கு துப்பாக்கிய ஏந்திய ஆயுதப்படை காவலர்களின் பாதுகாப்புடன் ஐடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக முக்கியப் புள்ளியான ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்களில் நடைபெறும் சோதனை அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் பகுதியில் உள்ள எலைட் என்கிற மதுபான தொழிற்சாலையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் இந்த தொழிற்சாலையில் போலீசார் பாதுகப்புடன் 8க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.