சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை; உயர்நீதிமன்ற நீதிபதி கோரிக்கை!

சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை; உயர்நீதிமன்ற நீதிபதி கோரிக்கை!
Published on
Updated on
1 min read

சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில்  திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு நீதிபதியாக உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், புழல் சிறையில் திடீர் சோதனை  நடத்தினார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார். 

இதில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய குழு உறுப்பினர் நசிர் அகமது, திருவள்ளுவர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி மற்றும் தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ளது போல, சிறைக் கைதிகளுக்கு  தாம்பத்திய உரிமை வழங்கும்  திட்டத்தை தமிழகத்திலும் செயலபடுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென அரசை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
மேலும், புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கும், சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்கும் அறை வசதி, மின் விசிறி, தரமான உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, ஆறு வயது வரையிலான குழந்தைகள் சிறையில் தாயுடன் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்குவதுடன், மழலையர் பள்ளிகளை துவங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றம் ஜாமீன் அளித்தும் பிணைய தொகை செலுத்த முடியாத காரணத்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சிறை வாசிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் அரசுக்கு வலியுறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com