தப்பி ஓடிய கைதி மீண்டும் கைது!
நாகர்கோயிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கைதி ஒருவர் சிறையில் அடைக்க சென்றபோது தப்பியோடி பின் 5 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் வல்லரசு என்ற 23 வயது இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் கைது செய்த இளைஞனை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் கைதியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் கைதிக்கு கை, விலங்கிட்டு நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலைக்கு காரில் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்றம் முன்பு வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கைதி குதித்து தப்பி ஓடினார். இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கைதியை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் அந்த கைதி தந்திரமாக தப்பிவிட்டார்.
இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. பின்னர் இரவில் கைதியை பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மேலும் கைதியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சுமார் 5 மணி நேரம் போலீசாரின் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் கைதி அதிகாலையில் முதல் பஸ்ஸில் ஏறி தப்பி செல்ல பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் கைதி வல்லரசை பிடித்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய கைதி மீது அந்த பகுதி காவல் நிலைய நேசமணிநகர் போலீசார் கைதி மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மோட்டார் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதையும் படிக்க:இஸ்லாமிய பயணிகளை சுட்ட ஆர்.பி.எப். மனநலம் பாதிக்கப்பட்டவரா?