ஈரோடு தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் இளநீர் வியாபாரி முருகேசன், சுண்ணாம்பு ஓடையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றுள்ளார். அந்தக் கடையின் விற்பனையாளர் மதுவிற்கு அரசு நிர்ணயம் செய்த MRP விலையைவிட கூடுதலாக 5 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால் முருகேசன் மது பாட்டிலில் உள்ள MRP விலைக்கான பணத்தை மட்டுமே கொடுப்பேன் எனக் கூறியதுடன், MRP விலையைவிட ஏன் அதிக கட்டணம் வசூலிக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் விற்பனையாளருக்கும் முருகேசனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து டாஸ்மாக் கடையில் தகராறு செய்வதாக விற்பனையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கருங்கல்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் ராஜூ, விசாரணை செய்தபோது, முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இளநீர் வியாபாரியான முருகேசன், தான் வழக்கமாக இளநீர் வெட்ட பயன்படுத்தும் அறிவாளால் தலைமை காவலர் ராஜூவை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த காவலர் ராஜு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் நேரில் சென்று பார்த்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே இளநீர் வியாபாரி முருகேசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபானத்திற்கு அரசு நிர்ணயம் செய்த MRP விலையைவிட கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மாக் கடை ஊழியர்களை தட்டிக்கேட்ட குடிமகன், ஐந்து ரூபாய்க்காக விசாரணை நடத்த வந்த காவலரையையும் வெட்டியது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.