சென்னைக்கு வந்த ரயிலில் பல லட்சம் ரூபாய் ஹவாலா பணம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருடன், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இணைந்து இன்று சோதனை நடத்தினர். அந்தவகையில் நடைமேடை 1-ல் இன்று காலை ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஷிவமொக்கா விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டபோது, அதில் பயணித்த கோபால் என்ற பயணி சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்துகொண்டதால் அவரது உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சோதனையில் அவரது பையில் இருந்து 40 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சேதமடைந்த வைர நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணம் மற்றும் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பயணி கோபாலிடம் ஆர்.பி.எஃப் காவல் நிலையத்தில் வைத்து தொடர் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர், பணம் மற்றும் நகைகள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : சென்னை : தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து...!