வாட்ஸ்-அப்பில் சாதிப்பெருமை பேசியதால் வெட்டிக் கொலை... எங்கே செல்கிறது சமூகம்?

வாட்ஸ்-அப்பில் சாதிப்பெருமை பேசியதால் வெட்டிக் கொலை... எங்கே செல்கிறது சமூகம்?
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். 22 வயதான சுரேஷ், சமையல் வேலைகளுக்கு சென்று வருவதோடு, ஊருக்குள் தன் சார்ந்த சமுதாயப் பெருமைகளைப் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 

சமூகம் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டதில் தகராறு

இவர்களுக்கென்று தனியாக ஒரு வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கிக் கொண்டு அதில் பலரும் தன் இனம் சார்ந்த பெருமைகளை பதிவிட்டு காலரை தூக்கிக் கொண்டு வலம் வந்திருக்கின்றனர். மானம்தானே வேட்டி சட்ட, மத்ததெல்லாம் வாழ மட்ட என்றும், பழகிப்பார் பாசம் தெரியும், பகைத்துப் பார் வீரம் தெரியும் போன்ற கம்பி கட்டும் வார்த்தைகளை பேசி வந்திருக்கின்றனர். 

ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இந்த வாட்ஸ்அப் குழுவில் கருத்துக்களை பதிவிடுவதில் கடும் போட்டி உண்டாகியிருக்கிறது. தேவையற்ற புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டதில் ஏற்கெனவே வாக்குவாதமும் ஏற்பட்ட கதையும் நிகழ்ந்திருக்கிறது. 

வாட்ஸ்அப் குழுவில் கருத்துக்களை பதிவிட்டதால் சர்ச்சை

இந்நிலையில் வாட்ஸ்அப் குழுவில் உள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த பந்தல்ராஜ் என்பவருக்கும், சுரேசுக்கும் கருத்து மோதல் தொடங்கி, போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளால் ஒருவரையொருவர் அர்ச்சித்தும் வந்துள்ளனர். பந்தல்ராஜை சுரேஷ், கடுஞ்சொற்களால் வீடு கட்டியதையடுத்து தன்மான உணர்வு பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. 

பந்தல்ராஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் கயத்தாறு சென்று வடக்குத் தெருவில் வசித்து வந்த சுரேஷ் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். சுரேஷின் தாயார் ரேவதி கதவைத் திறந்த மறு கணமே, அங்கு களேபரம் உண்டானது. ரேவதியை கீழே தள்ளி விட்டு சென்ற கும்பல், தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிய விட்டு தப்பியோடியது.  அரிவாளால் வெட்டப்பட்ட சுரேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தாய் கண் முன்னே மகனை வெட்டிச் சாய்த்த கொடூரர்கள்:

தப்பியோடிய பந்தல்ராஜ் உள்ளிட்ட 6 பேரை கயத்தாறு போலீசார், தேடிப்பிடித்து சிறையில் அடைத்தனர். அப்போது சமூகம் சார்ந்த கருத்துக்களை பதிவிடும் போட்டியிலேயே கொலை செய்ததாக அனைவரும் ஒப்புக் கொண்டனர். 

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மக்களின் நலனுக்காகவே வடிவமைக்கப்பட்டவையாகும். தனது நியாயமான கருத்துக்களை நேரடியாக சொல்வதைக் காட்டிலும்,  இணையதளங்களில் பதிவிட்டு உலகெங்கும் பரப்புவதற்கும் இப்படியான சமூகலைதளங்கள் பெரிதும் உதவி புரிந்து வருகிறது.

சாதிப்பெருமை பேசும் இளைஞர்கள் விழித்துக் கொள்வது எப்போது?

ஆனால் எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும், தன் மிருகத்தனத்தை கொம்பு சீவிக் கொண்டே இருக்கின்றனர் இவ்வாறான இளைஞர்கள். சமூக வலைதளங்களில் சாதிப்பெருமை பேசும் இந்த பிற்போக்குத் தனம் என்றுதான் ஒழியுமோ?

.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com